வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் இவரின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் பாதகமானதாகும்.

பிரபாகரனியமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்

போர்த்துக்கேயரிடம் தமிழிறைமையை இழந்த பின், பிரித்தானியரின் காலத்தில் ஒற்றையாட்சி வடிவத்துக்குள் உட்புகுத்தப்பட்டு, பிரித்தானிய காலனியத்துவவாதக் கட்டமைப்புக்களிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன், இலங்கையின் இனவழிப்பிற்குத் தமிழினம் பலியாகத் தொடங்கியது. இதற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் பல வெடித்தும், தமிழினம் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் மட்டுமே இப் போராட்டங்களினூடாகப் பெறமுடிந்தது. இதற்கு ஒரு புறத்தில் இலங்கை அரசின் அரசியல் சூழ்ச்சிகளும், அரச வன்முறைகளும் காரணமாக இருந்தாலும், மறுபுறத்தில் தமிழ் அரசியற் தலைமைகளின் அறியாமையும், தூரநோக்குப்பார்வையற்றமையும், சுயநலன்களும் காரணங்களாக அமைந்தன. இதற்கு “தந்தைப் பட்டம்” அளிக்கப்பட்ட தமிழ் அரசியற் தலைமையும், விதிவிலக்கல்ல. இதன் விளைவாக, பல இளைஞர்கள் சினம்கொண்டு எழுந்தனர்.

எழுச்சி கொண்ட இளைஞர்களுள், வே. பிரபாகரன் அவர்களும் அடங்கினார். பலர் வழிதவறிச் சென்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ, மற்றும் அரசியல் அறிவினூடாகவும், தூரநோக்குப்பார்வையோடும், வழிநடத்தினார். தமிழ் அரசியற் தலைமைகளின் கீழ் எதனையும் சாதிக்காத தமிழினத்தை, ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைத்து, 16ம் நூற்றாண்டில் பறிபோன தமிழிறைமையை, எந்தவொரு நாட்டின் உதிவியில்லாமல் மீட்டெடுத்தார்.

பிரபாகரனியமும் சர்வதேசமும்

https://divesrilanka.com/DSPulmudai/DSRPulmudai-MVC96.jpg
https://divesrilanka.com/DSPulmudai/DSRPulmudai-MVC96.jpg

தமிழிறைமைக்கான ஆயுதப்போராட்டம் வெடித்தவுடன், சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளும், அழுத்தங்களும், இலங்கைத்தீவில் அதிகரித்தன. இதற்குள் அடங்கும் பிரித்தானிய இராணுவத்தின் மறைமுகமான பங்களிப்பும் (1), இந்திய இராணுவத்தின் நேரடி பங்களிப்பும் மற்றும் அமெரிக்காவின் கிளர்ச்சி முறியடிப்புத் திட்டங்களும்(2) (3), தமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களால் முறியடிக்கப்பட்டது. இவர் இச்சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும்
முன்னெடுத்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக:

1. வேறொரு நாட்டின் முன்னாள் பிரதமரின் மரணமும்
2. “Stillus Limassul“ கப்பலின் கடத்தலும் (4)
3. “MV CORDIALITY“ கப்பல் மீதான தாக்குதலும் மற்றும் (5)
4. பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலும்,அமைகின்றன.

இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் சர்வதேசத்தின் நகர்வுகள் எதிர்நோக்கப்பட்டன என்பதற்கு, 2002ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற போர்நிறுத்தக்காலம், ஓர் சிறந்த உதாரணமாக அமைகின்றது.

தமிழிறைமையழிப்பும் பிரபாகரனியமும்

3 தசாப்தங்களாக போராடிப் பெறப்பட்ட இறைமை, 2009ம் ஆண்டு, சர்வேதச வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளினால் வெல்லப்பட்ட கிளர்ச்சி முறியடிப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டு, இனவழிப்பு நடவடிக்கையினூடாக இது நிறைவேற்றப்பட்டது. பாரிய அழிவுகளுக்கும், தியாகங்களுக்கும் இடையில் தமிழிறைமைக்கான கொள்கை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நந்திக்கடல் கோற்பாடுகளினூடாக நிலைநாட்டப்பட்டது.

இதன் பின்னரான காலப்பகுதியிலிருந்து தமிழீழத்திலும், தமிழகத்திலும் மற்றும் புலம்பெயர்ந்துமுள்ள தமிழ்த் தலைமைகள், நந்திக்கடலில் முழங்கிய கோட்பாடுகளிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மெல்ல மெல்ல அந்நியப்படுத்துகின்றன. இதில் சிலர், தமிழிறைமைக்கான கொள்கைக்கு துரோகம் இழைத்தவரை அடிப்படையாக வைத்து, எம்மை அழித்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்புகுத்த முயல்கின்றனர். இவ்வேலைத் திட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் பங்குகொள்கின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

இதனை முறியடித்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்கு, தமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களின் புகைப்படங்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு அரசியல் செய்வது போதாது. அது ஓர் புகைப்படமாக மாத்திரமே அமைகின்றது. இவரின் கொள்கையை புரிந்துகொண்டு, அதன்வழி தமிழிறைமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே அதற்கான தீர்வாகும். 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தோர் தமிழீழத் தேசியத் தலைவவரின் கீழ் தமிழீழத்திலிருந்து வெளியேற்றபட்டனர். இவ்வரலாற்றிலிருந்து வரும் எமது போராட்டம், எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும்?

சர்வதேச வல்லாதிக்க சக்திகளே எமது இறைமையை அழித்தனர். இவர்களே எமக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மறுப்பதுமட்டுமல்லாமல், எம்மீது மேற்கொள்ளப்படும் இனவழிப்பைத் துரிதப்படுத்துகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில்,
தமிழீழத் தேசியத் தலைவவர் அவர்களின் புகைப்படங்கள் பொறித்த பொருட்களை விநையோகிப்பது எந்தவொரு பலனையும் தரப்போவதில்லை.

இவரின் கொள்கையின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, இவரின் கொள்கை, உலகத்தில் அடக்கப்படும் அனைத்து மக்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு, இச் சர்வதேச வல்லாதிக்க சக்திகள் வெற்றிகொள்ளப்பட வேண்டும். இல்லையேல், சே. குவாராப் போன்று, ஓர் விற்பனைப் பொருளாக மாத்திரமே, தமிழீழத் தேசியத் தலைவர் முடக்கப்படுவார்.

  • நிதர்சன்

(1) https://www.tamilnet.com/img/publish/2014/07/britains_dirty_war.pdf ; P.15
(2) „Learning Politics from Sivaram“ : P.128
(3) „Learning Politics from Sivaram“ : P.133
(4) https://fas.org/irp/world/para/docs/com77e.htm
(5) https://wikileaks.org/plusd/cables/97COLOMBO3548_a.html

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*