சுவிஸ் நாட்டின் அகதிகளுக்கான தினத்தன்று (16.06.2018) இரு வெவ்வேறு நிகழ்வுகளில், அக்கினிப் பறவைகள் அமைப்பினால் சுவிஸ் நாட்டவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாட்டின் பேரண் மற்றும் சூரிச் மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், „தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு“ தொடர்பாகவும் மற்றும் „சர்வதேசத் தோழமை என்னும் சூழலில் தமிழீழ விடுதலைப் போராட்டம்“ தொடர்பாகவும் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பேர்ண் மாநிலத்தில், பலதரப்பட்ட இடதுசாரி அமைப்புகளினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு பேரணியில், அக்கினிப் பறவை அமைப்புக்குப் பேசும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அப்போது அக்கினிப் பறவைகளினால் சுவிஸ் வாழ் மக்களுக்குச் சொல்லப்பட்ட கருத்தானது:
„பல இனங்களையும் அமைப்புகளையும் சார்ந்த நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். இது போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். 2018ம் ஆண்டிலும் உலகமெங்கும் பல்தரப்பட்ட மக்கள் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாகவும் ஊடகங்களில் வருகின்ற போதிலும் மனிதநேயத்திற்கான வளர்ச்சிகள் எங்கே சென்றுவிட்டன. அனைவருக்குமான சமவுரிமை, அடக்குமுறை இல்லாத வாழ்வு மற்றும் இனவழிப்பு இல்லாத உலகம் என்பது நடைமுறையில் இல்லை. தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இனவழிப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் காரணமாக தமிழர்கள் தங்களின் இறைமையினை இழந்தனர்.
2009ம் ஆண்டு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தமிழீழ அரசு அழிக்கப்பட்டது. இவ்வரசு தமிழீழ விடுதலைப் போராடத்தினூடாக நிறுவப்பட்டிருந்தது. இன்றைய காலத்தில் விடுதலைப் போராட்டங்கள், தந்திரத்தின் அடிப்படையில் பயங்கரவாதமாகச் சித்திரக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அனைத்து அடக்கும் வல்லரசுகள் ஒன்றிணைந்து, 2009ம் ஆண்டு தமிழீழம் தம்மிடம் சரணாகதியடைவதற்கான அழுத்தங்களை மேற்கொண்டன. ஆனால் தமிழர்கள் சரணாகதியடைய மறுத்தனர். அதனை தமிழர்கள் மேற்கொண்டிருந்தால், அது அனைத்து அடக்கப்படும் இனங்களின் சரணகாதியாகப் பார்க்கப்பட்டிருக்கும். பெருந்தொகையில் கொல்லப்பட்ட மக்களின் உயிர்களே, தமிழர்கள் அதற்காக கொடுத்த விலையாகும். இதனால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எதற்கு தமிழீழத்தை அழிப்பதற்கான தேவை அந்நாடுகளுக்கு ஏற்பட்டது? அதற்கான ஒரு காரணம், தமிழீழ அரசு பல விடயங்களில் உலகத்துக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கியுள்ளது. அதற்குச் சிறந்த உத்தரங்களாக பெண்களின் சமத்துவம், மதங்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் சமுதாயத்துக்குள் வலுவிழந்தோர்க்கான நம்பிக்கையூட்டும் மாற்றுவழுச் செயற்பாடுகள் போன்றன விளங்குகின்றன. அதனாலேயே தமிழீழத்தின் அழிவு அனைத்து அடக்கப்படும் இனங்களுக்கான ஒரு இழப்பாக உள்ளது.
தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழர்களின் போராட்டத்தை ஒரு பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் முயற்சியின் அடிப்படையில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஆனால் கடந்த வியாழன் அன்று, 30 வருடகாலமாக நடைபெற்ற போர் ஒரு விடுதலைப்போர் என சுவிஸ் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழர்களாகிய நாங்கள் ஒரு சர்வதேச தோழமைக்குத் தயாராகவுள்ளோம். நான் இங்கே கூறிய விடயங்கள், தமிழர்களுக்கு மட்டுமான விடயங்கள் அல்ல. அடக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடயங்களாகும். அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகல அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டும்.
இப்பேரணியை ஒழுங்கு செய்தவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெல்வது உறுதி“
அதற்குப் பிற்பாடு சூரிச் மாநிலத்தில் தமிழர்களின் பண்பாடு தொடர்பாக நடைபெற்ற இன்னொரு நிகழ்வில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு தொடர்பான விளக்கங்கள் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் வழங்கப்பட்டது. சுவிஸ் நாட்டவர்கள் பலர் இந்நிகழ்விற் கலந்து கொண்டு, தமிழீழத்தின் வரலாறு தொடர்பாக ஆவலுடன் அறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையாக அக்கினிப் பறவை அமைப்பு தமிழீழ அடையாள அட்டையை மீள்வெளியீடு செய்திருந்ததோடு, அவ்வமைப்பின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. அதன் அடிப்படையில் சுவிஸ் நாட்டின் பிரபல்யமான பத்திரிகையான NZZ எனும் பத்திரிகையில், இத் தமிழீழ அடையாள அட்டை தொடர்பாக எழுதப்பட்டிருந்தமை ஒரு முக்கியமான விடயமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நல்ல் முன்னெடுப்புகள் சிறந்த நகர்வுகள் தொடரட்டும்.
நன்றி அண்ணா
உங்களின் ஆதரவிற்கு நன்றி