நோம் சொம்ஸ்கி ஒரு அறிமுகம் – அவிரா

இன்று உலகில் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக அமேரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி, அமேரிக்காவில் வாழ்ந்து வரும், 80 வயதைத் தாண்டிய நோம் சொம்ஸ்கி. இவர் எம் ஐ ரி
பல்கலைக்கழகத்தில் மொழியில் பேராசிரியராக இருந்தவர்.
மொழியியல் பற்றிய இவரின் ஆய்வுகளால் இவர் மொழியியலின் ஐன்ஸடீன் என்று விபரிக்கப்படுபவர். பல தசாப்தங்களாக இவர் மக்களுடனான அரசியல் உரையாடலைத் தொடர்ந்து வருகிறார். 1967ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக வருடத்திற்கு குறைந்தது ஒரு நூல் அமெரிக்காவின் பயங்கரவாதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். எட்வேட் ஹேமன் என்பவரும் இவரும் சேர்ந்து விபரித்த ‚பரப்புரை மாடல்‘ இன்று உலகப் பொது அறிவில் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது.

அமெரிக்க ஊடகங்களில் செய்திகளைச் தெரிவு செய்யும் போது ஐந்து வடிகட்டிகளூடாக அவை வடிகட்டப்பட்டு வருவதால், அவை வெளியிடும் செய்திகள் உண்மையை பிரதிபலிப்பதில்லை என்பதை அவர்களின் பரப்புரை மாடல் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் குறிப்பிட்ட வடிகட்டிகளில் முதன்மையானதாக உள்ளவை: ஊடக உரிமை, செய்தியின் மூலம், மற்றும் விளம்பரம் போடுபவர்கள் என்ற மூன்று வடிகட்டிகள்.

https://www.mindsetrevolution.net/medienmanipulation/

ஊடகங்கள் ஒரு சில பெரும் முதலாளிகளின் கையிலேயே உள்ளன. இம்முதலாளிகள் ஊடகத்தைவிட இன்னும் பல தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அதனால் இவ்வூடகங்களில் வரும் செய்திகளும் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.
விளம்பரதாரர்கள் தம் பொருட்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விற்பனையை அதிகரிக்கிறார்கள் என்பதே பொதுமக்களின் கருத்து. ஆனால் இதையே இவர்களின் மாடல் ‚ஊடகங்கள் வாசகர்களை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்‘ என்று பார்க்கிறது. இந்த விளம்பரதாரர்களுக்கு உகந்த, அவர்களின் பொருட்களை வாங்கக் கூடிய வாசகர்களையே ஊடகங்கள் பெருக்க விளையும் என்பது இவர்களின் மாடலின் ஒரு கருத்து. இதுவும் செய்திகளின் ஒரு வடிகட்டியாக இருக்கும்.

ஊடகங்கள் செய்திகளை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றன என்பதை விளக்குகிறது மூன்றாவது வடிகட்டி. பணத்தாலும் அதிகாரத்தாலும் வலிமையான இடங்களுடன் ஊடகங்கள் ஒருவருக்கொருவர் நன்மை கொடுக்கக் கூடிய உறவை வளர்த்து, செய்திகளை அங்கிருந்தே பெற்றுக்கொள்கின்றன. இது மூன்றாவது வடிகட்டி.

யாராவது ஒரு ஊடகவியலாளர் ஊடகத்தின் நலனுக்கு எதிரான உண்மையான செய்தியை எப்போவாவது போடும்போது அவருக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அதனாலும் இம்மாதிரியான செய்திகள் வடிகட்டப்படுகின்றன.

இறுதியாக பயத்தை வளர்த்து உண்மையற்ற செய்திகளை வெளியிட வழி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கொம்யூனிசப் பயத்தை வளர்த்தார்கள். பின்னர் பயங்கரவாதிகள் என்ற பயத்தை வளர்க்கிறார்கள். இத்துடன் சிலரை கொடூரமானவர்களாக சித்தரத்தும் பயத்தை வளர்க்கிறார்கள். உதாரணமாக சதாம் ஹூசேன், கடாபி போன்றவர்கள் மேல் இவர்கள் போட்ட போர்வை.

https://theplaidzebra.com/journalists-cutting-bullshit-fear-mongering-todays-media/

இந்த பரப்பரை மாடலைப் பற்றி ஆழமாக விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் படிக்கலாம். அந்த மாடல் ஏனைய நாட்டு ஊடகங்களுக்கும் பொருந்தும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் ஒரு கருத்து. சொம்ஸ்கி-ஹேமன் ஊடகங்களைப்பற்றி விபரித்ததை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட ஓரளவு பொருத்திப்பார்க்கலாம். எவ்வாறு ஊடகங்கள் வலிமை மிக்க முதலாளிகளின், நாடுகளின் நலனைச் சார்ந்து இயங்குகின்றவோ, அவ்வாறே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் அதிகமாக செயற்படுகின்றன. இவ்வரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி எங்கிருந்து வருகின்றது என்று ஆராய்ந்தால் அவர்களின் சார்புத் தன்மை தெளிவாக புலப்படும்.

அதிகார வர்க்கங்கள் அரசியலைப் பற்றி பேசும் போது, அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்களைப்பற்றி சொம்ஸ்கி பேசிய ஒரு உரையில் சொன்னவை.

‚இவர்கள் அரசியலைப் பற்றி பேசும் போது உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டு கருத்துக்கள் உண்டு. சில உதாரணங்கள். சனநாயகம் என்பதற்கு பொதுமக்கள் தமது சொந்த விவகாரங்களை தாமே நடத்துவதற்கான வழிமுறைகள் என்று பொருள். மற்றைய கருத்து, பெரும் முதாலாளி வர்க்கம் நடத்துவதே சனநாயகம் என்பது. இக்கருத்திலேயே அதிகார வர்க்கம் சனநாயகம் என்ற சொல்லை இன்று உபயோகிக்கிறது.
‚சமாதான பேச்சு வார்த்தை‘ என்பதும் அப்படியே. ஒரு கருத்தில் பேச்சு வார்த்தையினூடாக ஒரு முடிவை எட்டுதல் என்று பொருள்.

இன்னுமொரு கருத்து, எதை அமெரிக்கா எட்ட விரும்புகிறதோ அதுவே பேச்சு வார்த்தை என்பது. இந்த இரண்டாவது கருத்துப்படி அமெரிக்கா ஒருபோதும் பேச்சு வார்த்தைக்கு எதிராக இருக்க முடியாது. இக்கருத்தை பரிசோதிக்கும் நோக்குடன் பத்து வருடங்களுக்கான ஒரு அமெரிக்க ஊடக வெளியீடுகளில் ‚பேச்சு வார்த்தை‘ என்ற சொற்பதத்தை தேடிய போது ஆயிரம் இடங்களில் இச்சொற்பதம் கையாளப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றில் கூட அமெரிக்கா ‚பேச்சு வார்த்தைக்கு‘ எதிராக செயற்படுகிறது என்று வரவில்லை.

https://theplaidzebra.com/journalists-cutting-bullshit-fear-mongering-todays-media/

ஆனால் இக்காலத்தில் அமெரிக்கா மத்திய கிழக்கிலும், மத்திய அமெரிக்காவிலும் பல இடங்களில் பேச்சு வார்த்தைகளைத் தடுத்துக்கொண்டிருந்தது. வேறும் பல இடங்களிலும் அமெரிக்கா எவ்வாறு சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது என்ற செய்திகளை ஆழமாக புரிந்தால் இம்முயற்சிகளின் பின்னால் உள்ள உண்மை புலப்படும்.

மத்திய அமெரிக்காவில் ‚மனிதாபிமான உதவிகள்‘ என்ற போர்வையில் அமெரிக்கா இயக்கிய ஆயதக்குழுக்களுக்கு அமெரிக்கா உதவிகள் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்தன. இந்த உதவிகளை கொடுத்தது ‚யுஎஸ் எயிட்‘ என்றழைக்கப்பட் அமெரிக்காவின் ஒரு நிறுவனமே.

இது போலவே பயங்கரவாதம் என்ற சொற்பதமும். இது பற்றிய ஒரு கருத்து: அரசியல் மற்றும் கொள்கைரீதியான காரணங்களுக்காக பொதுமக்களைப் பயமுறுத்துவதற்கு செய்யப்படும் வன்முறைகள். அமெரிக்க சட்டத்திலும் இதுவே பயங்கரவாதத்தின் பொருளாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கருத்தின் பிரகாரம் உலகில் முதன்மையான பயங்கரவாதிகள் அமெரிக்காவும், பிரித்தானியாவும் அதற்கடுத்ததாக பிரன்சும் தான். அதனால் இக்கருத்தை தள்ளிவிட்டு வேறொரு கருத்து இதற்கு கொடுக்க வேண்டிய தேவை ஊடகங்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உள்ளது. இவர்களும் பயங்கரவாதத்திற்கு இதே வரைறறையைத்தான் உபயோகிக்கிறார்கள். ஆனால் இன்னுமொரு நிபந்தனையுடன். பயங்கரவாதம் என்பது மற்றவர்கள் எமக்கு செய்வது மட்டுமே என்பதுதான் இந்த மேலதிக நிபந்தனை.‘
இஸ்ரேயில்-பலஸ்தீனைப் பற்றி சொம்ஸ்கி சொல்லுவது அமெரிக்காவினதும் மேற்குலகினதும் பூகோள நடத்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்க முடியும்.

‚இஸ்ரேயில்-பலஸ்தீன் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனே நிபந்தனைகள் போடுவதாக சொல்லப்படுகிறது. பல தசாப்தங்களாக இரு நாட்டுத் தீவு என்பது அமெரிக்கா இஸ்ரேயிலைத் தவிர்ந்த ஏனைய உலக நாடுகள் முழுவதும் 60களிலிருந்து ஏற்றுக்கொண்டிருக்கிறன. இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவே நடுவராக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இஸ்ரேயிலும் நிபந்தனைகள் போடுகிறது.

உலக நாடுகளின் நிலைப்பாட்டைப் எடுத்துப் பார்த்தால் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க-இஸ்ரேயில் கூட்டுக்கும் ஏனைய உலகத்துக்கும் இடையே தான் இருக்க வேண்டும். இதையும் விட இஸ்ரேயில் தனது சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்திட்டங்களை தொடர அனுமதி வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்திருக்கிறது. இந்தக் குடியேற்றங்கள், அதாவது வேறு மக்களை ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றம் செய்வது ஒரு போர்க்குற்றம் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல அமைப்புக்கள் அங்கீகரித்துள்ளன.

இருந்தாலும் அமெரிக்கா ஆதரித்தால் இஸ்ரேயில் இப்போர்க்குற்றத்தையும் செய்யலாம். இது தொடர்ந்தால் இறுதியில் இருநாட்டு தீர்வு என்பது கருத்தில்லாத ஒன்றாகிவிடும்.

இஸ்ரேயில் இவ்வாறு குடியேற்றம் செய்த இடங்களில் இஸ்ரேலியர்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுக்கிறது. அதே நேரத்தில் பலஸ்தீனிய மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். இது உலகில் எங்கே எல்லாம் நவீனகாலனித்துவம் வளருகின்றதோ அங்கே எல்லாம் காணலாம். உலகிலேயே வறுமையான ஆபிரக்காவின் சகார பகுதிகளிலும் கூட மேற்குலகத்தில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கை வாழக்கூகூகூடிய சில செல்வந்தர்கள் இருப்பார்கள்.‘

பூமிக்கும் மானிட இனத்திற்கும் இரண்டு மிகப்பெரும் ஆபத்துக்களாக இருப்பவை ஆணு ஆயுதங்களும் சூழல் பேரழிவும் என்று சொம்ஸ்கியும் வேறும் பலரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். இவற்றை கருத்திலெடுக்காமல் பூமயை அழிவை நோக்கி எடுத்துச் செல்லும் இரண்டு அயோக்கிய நாடுகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் சொம்ஸ்கி குறிப்பிடுவார்.

இன்று உலகில் செய்யப்படும் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்களை அமெரிக்காவே பகிரங்கமாக அதனுடைய ட்ரோன் தாக்குதல்களால் செய்து வருகிறது. யாரெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படக் கூடும் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறதோ அவர்களை எல்லாம் இவ்வாறு கொன்று வருகிறது என்கிறார் சொம்ஸ்கி.

சொம்ஸ்கி சொல்லிவரும் இன்னுமொரு கருத்து. பல இடங்களில் அமெரிக்கா தனது பயங்கரவாத செயல்களை முன்னெடுத்ததற்கு காரணம் இவ்விடங்களை உலகின் ஏனைய இடங்களும் பின்பற்றாமல் தடுப்பதற்காகவே. ‚வைரஸ் போல இவை பராவாமல் இருப்பதை தடுப்பது‘ என்றும் ‚ஒரு நல்லுதாரணமாக இருப்பதை தடுப்பது‘ என்று அவர் விபரிப்பார். இதற்கு உதாரணமாக, 60களில் வடக்கு வியட்நாம் மேல் படையெடுத்ததையும், கியூபா நாட்டிற்கு பல அச்சுறுத்தல்களைக் கொடுத்ததையும், 70களில் சில்லி நாட்டு சல்வடோர் அலண்டே அரசைக் கவிழ்த்ததும், அண்மையில் வெனிசுவேலா நாட்டின் மேல் விமர்சனங்கள் வைப்பதையும் இன்னும் பலவற்றையும் உதாரணமாக காட்டுவார்.

அமெரிக்காரவப் பற்றி பேசும் சொம்ஸ்கி துரதிஸ்டவசமாக இலங்கைத்தீவில் அமெரிக்காவின் நடத்தைகளைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. 2009க்குப் பின்னர் மட்டும் நடந்ததை ஒரு பெரிய பேரழிவு என்று விபரித்தார். அவரைக் கேட்ட போது தனக்கு அதிகம் தெரியாதவற்றைப் பற்றி தான் பேசுவதில்லை என்று மட்டும் சொல்வார். அது ஞாயமும் கூட.

இதைப்பற்றி முழுமையாக பேசியவர்கள் 2013இல் பிரேமன்-ஜெர்மனியில் நடந்த மக்கள் தீர்பாயத்தின் நீதிபதிகள்தான். இவர்கள் நடந்த இனவழிப்புக்கு அமெரிக்காவும் துணைபோனது என்று தீர்ப்பழித்துள்ளார்கள். அதற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– அவிரா

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*