அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 31வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பினால் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன் தியாகி லெப் கேணல் திலீபன் நினைவாகக் கலை நிகழ்வு ஒன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மேற்படி அடையாள உண்ணாநிலைப் போராட்டமானது இரண்டாவது தடவையாக நடாத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதியம் 13.00 மணியளவில் பேர்ண் மாநிலத்தின் புகையிரத நிலையத்துக்கு முன்பாக நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பமாகி, மாலை 16.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் மண்டபத்தில் தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவு சுமந்த இறுதி நிகழ்வுகள் தொடர்ந்தன. அந்நிகழ்வில் லெப் கேணல் திலீபன் அவர்களினதும் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவுகள் சுமந்த பல கலை நிகழ்வுகள் நடைபெற்றதோடு, அக்கினிப் பறவைகள் முன்வைத்த 9 கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு கண்டது.
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் சார்பிலிருந்தும் நினைவுரையாற்றப்பட்டு, தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களுக்காக ஒரு விசேட பூசையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் இடம்பெற்றது.
இவ்வாண்டு சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் இடப்பெயர்வு தொடர்பான கூட்டாண்மைக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதோடு, ஐநாவின் மனித உரிமைகளுக்கான அவையில் கலந்துகொள்ளவிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கான நுழைவு அனுமதிப் பத்திரத்திற்கும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் நடைபெற்ற அக்கினிப் பறவைகள் அமைப்பின் உண்ணாநிலைப் போராட்டமும் அத்துடன் கோரப்படும் 9 கோரிக்கைகளில் சுவிஸ் அரசை நோக்கிய 2 கோரிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கினிப் பறவைகள் அமைப்பு முன்வைத்த 9 கோரிக்கைகள்
Schreib einen Kommentar