அரசியற்தளம், ஆயுதப் போராட்டம் மற்றும் நந்திக்கடற் கோட்பாடு என்ற தலைப்பைக் கொண்ட காணொளியின் தொடர்ச்சியாக இக் காணொளி அமைகிறது. அக் காணொளியின் அடிப்படையிலேயே இக் காணொளியின் உள்ளடக்கமான ஐந்தாம் கட்ட ஈழப்போரினைப் பார்த்தாக வேண்டும்.
ஐந்தாம் கட்ட ஈழப்போர்
ஐந்தாம் கட்ட ஈழப்போரினைப் புரிந்து கொள்வதற்கு, புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் வசிக்கும் நாடுகளில் அமைந்துள்ள அரசியற்தளங்களைப் பார்ப்போம். இங்கேயும் அரசியற் தளங்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும்.
முதலாவது அரசியற்தளம்
புலம் பெயர்ந்த நாடுகளில் நடைமுறையிலுள்ள அரசியற்தளமாகும். இவ்ரவசியற்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக கட்சி அரசியல், பாராளமன்ற அரசியல், ஐ நாவின் பொறிமுறைகள் போன்றன அமைகின்றன.
இரண்டாவது அரசியற்தளம்
தமிழர்களால் தமிழர்களுக்காக இந்நாடுகளில் அமைக்கப்பட்ட அரசியற்தளமாகும். அதற்குள் தமிழ்ப் பாடசாலைகள், கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள், வணிகத்தலங்கள், தேசிய நிகழ்வுகள் போன்றன இடம்பெறுகின்றன.
தமிழிறைமைக் கொள்கையானது 2009ம் ஆண்டு நந்திக்கடற் கோட்பாட்டின் ஊடாக பாதுகாக்கப்பட்ட பின், அக் கொள்கை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் உருவாக்கப்பட்ட அரசியற் தளங்கள் மூலம் இடமாற்றத்துக்குட்பட்டு நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அதனாலேயே தமிழிறைமைக் கொள்கையை அழிக்கும் நோக்குடன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் மற்றும் அவர்களினால் உருவாக்கப்பட்ட அரசியற் தளங்களும் இலக்கு வைக்கப்படுகின்றன.
இதுவே 5ம் கட்ட ஈழப்போர் ஆகும். 5ம் கட்ட ஈழப்போரின் நோக்கம். என்னவெனில், „புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைபாட்டிலிருந்து விலக வைத்து, முன்வைக்கப்படும் தீர்வினை ஏற்றுக்கொள்ள வைத்தலாகும்.“
எம்மில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் அமைக்கப்பட்ட அரசியற் தளங்களை வெறுமெனே பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு தளமாகப் பார்க்கின்றனர். அதற்கு இக்காலத்துப் பல செயற்பாட்டாளர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள் இவ்வரசியற் தளங்களின் பலத்தினை வெளிப்படுத்தி நின்றது. ஏனெனில் அக்காலப்பகுதியில் ஒரு 20 ஆண்டுகள் காலப்பகுதியினைக் கொண்ட மற்றும் பெரும்பாலும் அடிமட்ட வேலைகளைப் புரியும் சமூகமே இப்போரட்டங்களை நடத்தியமையாகும். அத்துடன் இப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் பல நாடுகளில், பல நாட்களாக நடைபெற்று அந்நாடுகளின் நிர்வாகங்களை அதிரவைத்தன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். எமது போராட்டத்தின் தொடர்ச்சியினை முறியடிப்பதற்காக இவ்வரசியற் தளங்களும் மற்றும் அதனை நிர்வகிக்கும் தமிழர்களும் குறிவைக்கப்படுகின்றனர்.
ஐந்தாம் கட்ட ஈழப்போரின் பொறிமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு, இக்காலத்தில் நடைபெறுகின்ற விடயங்களை கிளர்ச்சி முறியடிப்புத் திட்ட்ங்களின் மட்டுப்படுத்தல் நடவடிக்கையுடன் ஒப்பிட வேண்டும். எவ்வாறு பேச்சுவார்த்தை எனும் பொறிமுறை விடுதலைப் புலிகளிடம் பயன்படுத்தப்பட்டதோ, அவ்வாறே இன்று எம்மிடம் அதாவது நிலைமாறுகால நீதி உபயோகிக்கப்படுகிறது.
நிலைமாறுகால நீதி
2015ம் ஆண்டு 30/1 என்றழைக்கப்படும் தீர்மானம் ஐ நா மனித உரிமை அவையினால் நிறைவேற்றப்பட்டது. இதில் நிலைமாறுகால நீதி எனும் பொறிமுறையினூடாக தமிழர்கள் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட்டு, நீதி விசாரணை இலங்கையின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ் என்ற வார்த்தைப் பிரியோகமே இல்லாத இத்தீர்மானத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், உண்மை; நீதி; நல்லிணக்கம்; மீண்டும் நிகழாமைக்கான அலுவலகம் மற்றும் நட்ட ஈட்டுக்கான அலுவலகம் போன்ற விடயங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் இராணுவமயமாக்கல் மற்றும் நிலஅபகரிப்பு போன்ற விடயங்களும் இவ்வறிக்கையில் உள்ளடங்கினாலும், இவையின் பின்னணி மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவே எமக்குக் கிடைத்த நிலைமாறுகால நீதியாகும்.
கால அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும் இலங்கை அரசு இத்தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றவில்லை. இதனைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான செயற்பாட்டாளர்களின் கவனம் நிலைமாறுகால நீதிக்குள் முடக்கப்படுகிறது. அதே நேரம் இலங்கை, குறிப்பாக சுற்றுலாத்துறை, பெருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாகப் பலமடைந்து வருகிறது. இதன் எடுத்துக்காட்டாக பின்வரும் புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
சுற்றுலாவின் அடிப்படையில் இலங்கைக்கு வந்தவர்களின் தொகை
2015ம் ஆண்டில்: 17’98380
2016ம் ஆண்டில்: 20’50832
2017ம் ஆண்டில்: 21’16407
ஆகும்
ஜிடிபி என்றழைக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி
2015ம் ஆண்டில்: 79,56 billion us dollar
2016ம் ஆண்டில்: 80,98 billion us dollar
2017ம் ஆண்டில்: 87,59 billion us dollar மற்றும்
2018க்கான கணிப்பு : 93,45 billion us dollar
ஆகும்.
அத்துடன் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், பலமடைந்து வரும் இலங்கையின் இராணுவத்தையே குறிக்கிறது. இதற்கு அமெரிக்க இராணுவத்துடன் நடைபெற்ற „CARAT“ பயிற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது ஏவப்பட்ட இப்போரில் நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் தமிழர்கள் இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றனர். சர்வதேசத்தால் வழங்கப்பட்ட இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் குழப்பவாதிகள் என்றும் அதனை அங்கீகரிக்கும் நபர்கள் அமைதி காப்பவர்கள் என்றும் பிரிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் ஐந்தாம் கட்ட ஈழப்போரின் உத்திகள் வகுக்கப்படுகின்றன.
ஐந்தாம் கட்ட ஈழப்போரின் உத்திகளின் அடிப்படையில் குழப்பவாதிகளும் அரசியற் தளமும் தாக்கப்படுகின்றன. இதனாலேயே 2009ம் ஆண்டுக்குப் பின் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது வழக்குகள் தொடங்கப்பட்டு, பலர் சிறைக்குள் அடைக்கப்பட்டனர். இதன் அடிப்படையிலேயே சுவிஸ் நாட்டிலும் பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கொன்று தொடரப்பட்டது. இதற்குள் 2012ம் ஆண்டு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான பரிதி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமையும் அடங்குவதோடு 2018ம் ஆண்டு சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற நாட்டிய மயில் நிகழ்வின் பிரச்சனையும் உள்ளடங்குகிறது.
ஒரு புறத்தில் இவர்களால் வர்ணிக்கப்படும் குழப்பவாதிகளும், தமிழீழத்திற்கான அரசியற் தளமும் தாக்கப்படுவதோடு, மறுபுறத்தில் இணையத்தளத்தில் அமைந்துள்ள தமிழீழத்துக்கான அரசியற் தளமும் குறிவைத்து அழிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாகவே facebook, youtube, இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழீழ ஆவணங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
அனால் எமது அரசியற் செயற்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்படும் எதிர்நடவடிக்கைகள் என்ன?தங்களின் இணையத்தளத்தின் பெயர்களை தமிழீழ ஆவணங்களில் பொறித்து, தங்களின் குறுகிய வட்டச் சிந்தனையையும் மற்றும் தமது தூரநோக்குப் பார்வையற்ற போக்கினையும் வெளிப்படுத்துகின்றனர்.
முன்வைக்கப்படும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும் தரப்புகளான அமைதி காப்பவர்கள் ஐந்தாம் கட்ட ஈழப்போரின் அடிப்படையில் பலப்படுத்தப் படுகின்றனர். ஏனெனில் அவர்களே சர்வதேசத்தால் முன்வைக்கப்படும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும் தரப்பாகும்.
அவர்களை முன்னிலைப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்பும் முகமாக 5 உத்திகள் உபயோகிக்கப்படுகின்றன.
அவையாவன
1) குழப்பவாதிகளைக் கலைத்து அமைதிகாப்பவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டுதல்
2) எதார்த்தமான தீர்வுகளை ஊக்குவித்தல்
3) வளங்களைப் பலப்படுத்தல்
4) உள்ளக வெளியக ஆதரவை ஏற்படுத்தல்
5) உதவித்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளல்
போன்றவை ஆகும்.
1) குழப்பவாதிகளைக் கலைத்து அமைதிகாப்பவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டுதல்
குழப்பவாதிகள் எவ்வாறு கையாளப்படுகின்றனர் என்பதினைப் பார்த்துவிட்டோம். அது ஒரு புறத்தில் நடைபெறுவதோடு, மறுபுறத்தில் அமைதி காப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் இவ்வேலைத் திட்டங்களில் ஈடுபடும்போது, அவர்கள் மக்களின் மட்டத்தில் அம்பலப்படுவர். இதனாலேயே இவர்களின் செயற்பாடுகள் இரகசியமாக வைத்திருப்பதினூடாக, அமைதி காப்பவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விடயத்தை நோக்குவோம். 2018ம் ஆண்டு சுவிஸ் அரசும் இலங்கை அரசும் இடப்பெயர்வு தொடர்பான கூட்டாண்மையை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டிருந்தனர். இது தொடர்பான சுவிஸ் அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் ஒரு முக்கிய விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
„அதாவது சுவிஸ் நாட்டின் வெளியுறவுத் திணைக்களமானது மனிதவுரிமை அரசியல், கடந்தகால இன்னல்களைப் போக்குதல், நம்பிக்கையூட்டல் போன்ற நடவடிக்கையினை மேற்கொள்கிறது. இது அரச தரப்பு, எதிர்க்கட்சித் தரப்பு, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள், சமூக அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அரசியல் யாப்பு நிபுணர்கள் கலந்து கொள்ளும் சந்திப்புகளினூடாக நிறைவேற்றப்படுகிறது.
இதன் அடிப்படையில் நாம் எம்மைக் கேட்க வேண்டிய கேள்வி என்னெவெனில், புலம்பெயர்ந்த தமிழர்களின் தரப்பில் யார் இச்சந்திப்பில் கலந்து கொள்கின்றனர் என்பதாகும். ஒன்று, எமக்குத் தெரிந்த அரசியல் அமைப்புகள் அல்லது செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும். அல்லது அக் கட்டமைப்புகளுக்குப் அப்பால் இயங்கும் தரப்புகளே இச் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். இச் சந்திப்பில் கலந்துகொள்வோரின் அடையாளம் பாதுகாக்கப்படுவதினால், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறது.
எதார்த்தமான தீர்வினை ஊக்குவித்தல்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழ தேசத்தில் உள்ள மக்களை, சர்வதேசம் விரும்பும் தீர்வினை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உபயோக்கிக்கப்படுகின்றனர். ஏனெனில் சர்வதேசம் விரும்பும் தீர்வை புலம்யபெயர்ந்த தமிழர்கள் ஏற்காத பட்சத்தில், தாயகத்தில் வாழும் மக்களைக் கையாள்வது சர்வதேசத்துக்குக்கடினமாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே அமைதிகாப்பவர்கள் வளப்படுத்தப்படுகின்றனர்.
வளங்களைப் பலப்படுத்துதல்
சர்வ தேசங்களின் நலன்களை பேணும் அமைதிகாப்பவர்களுக்குப் பல வளங்களும் மற்றும் ஊடக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஏனெனில் ஏனையோரை இத்திட்டத்தை ஏற்றுகொள்ள வைப்பதற்காக அவர்கள் பல வழிகளில் பலப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக தொடர்பாடல் பொறிமுறைகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் இந்நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு 26.05.12 அன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்ற „Fit for action“ எனும் வேலைத்திட்டம் ஒரு உதாரணமாகும். இதன் போது தமிழ் இளையோருக்கு பல வகுப்புகள் எடுக்கப்பட்டது. முதலாவது வகுப்பிலேயே கலந்து கொண்ட ஒரு நபரிடம் கூறப்பட்ட விடயம் என்னவெனில்: „இனி நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிலிருந்து விலகவேண்டும்“ என்பதாகும்.
உள்ளக வெளியக ஆதரவை ஏற்படுத்ததல்
அமைதிகாப்பவர்களைப் பயன்படுத்தி தாயகத்திலுள்ள மக்களையும் மற்றும் வெளியக மக்களான புலம்பெயர்ந்த தமிழர்களையும் சர்வதேசம் விரும்பும் தீர்வினை ஏற்றுக்கொள்ள வைத்து, அதனூடாக ஒரு உள்ளக மற்றும் வெளியக அழுத்தத்தை ஏற்படுத்தி, தீர்வினை ஏற்றுக்கொள்ள வைப்பதாகும். இப் பொறிமுறை அயர்லாந்த் போராட்டத்தில் உபயோகிக்கப்பட்டதன் விளைவே „Good friday agreement“.
உதவித்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளல்
தமிழர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியினைப் பின்பற்ற்றுவதைத் தடுக்கும் முகமாக, புலம்பெயர்ந்த தமிழர்கள் வெறும் உதவி மட்டும் செய்யவேண்டும் என்ற நிலைக்கு மட்டுப்படுத்தப்படுகின்றனர். ஏனெனில் இவர்களுக்கு இதனூடாக ஒரு குற்ற உணர்வு ஏற்படும். தாங்கள் நன்றாக இருப்பதினாலும் மற்றும் எமது போராடத்தினால் ஏற்பட்ட அவலங்களினால் ஏனையோர் கஸ்டப்பட்ட நிலையில் இருப்பதினாலும், இவ் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் எமது போராட்த்தின் தொடர்ச்சசியினை கொண்டு செல்ல மாட்டார்கள். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், எமது மக்களுக்கு உதவித்திட்ட்ங்கள் செய்யப்பட வேண்டும். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதற்குள் எமது போராட்டத்தை முடக்கிவிட முடியாது.
அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களை இலங்கையில் முதலீடுகள் செய்யே வைப்பதினூடாக, அவர்களின் பொருளாதார நலன் இலங்கை அரசில் தங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் இலங்கையின் நோக்கங்களில் ஒன்றாகும். இதனால் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படமாட்டார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் புலம்பெயர்ந்த தமிழர்கள், அதிலும் குறிப்பாக வணிகத்தலங்களை நடத்தும் தமிழர்கள் நாடப்படுகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே 2016ம் ஆண்டு சுவிஸில் நடைபெற்ற „srilankan cultural festival“என்ற நிகழ்வும் மற்றும் 2018ம் ஆண்டில் வடமாகாண ஆளுநரின் வருகையும் அமைகின்றன. இதற்கு ஆளுநர் சுவிஸில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியினைக் கேட்கலாம்.
xxx
இவர் குறிப்பிடும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில், புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் பணத்தினை இலங்கையின் வங்கிகளில் வைத்திருக்குமாறு சொல்கிறார். ஏனென்றால் இதனூடாக இலங்கையின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணம் இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்தால், இலங்கைக்கு எதிராகச் செயற்பட முடியாது. 6ம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம்.
மேலே கூறப்பட்ட உத்திகள் „ENGAGING DIASPORA COMMUNITIES IN PEACE PROCESSES“ எனும் ஒரு ஆராய்வில் வகுக்கப்பட்ட உத்திகளாகும். 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இவ்வாராய்வில் விடுதலைப் புளிகளின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களை விலக வைக்கலாம் என்று ஆராயப்படுகிறது.
இவ்வாராய்வில் மேலும் இரண்டு முக்கிய விடயங்கள் குறிப்பிடப் படுகிறது.
முதலாவது விடயம் தமிழ் ஊடங்கள் பற்றியதாகும். விடுதலைப் புலிகளின் காலங்களில் இருந்த பல தமிழ் ஊடகங்கள் சர்வதேசத்தின் வேலைத்திட்டங்களுக்கு குந்தகம் விளைவித்ததினால், தமிழ் ஊடகங்கள் முக்கியமாகச் சரியாகக் கையாளப்படவேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்றைய காலத்தில் இருக்கும் 2 பெரும் ஊடகங்களும் தற்போது நிகழ்ந்துவரும் பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைவதால், இவ்வூடகங்கள் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதில் சுவிஸ் நாட்டில் 2018ம் ஆண்டு மாவீரர்வாரத்தில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு ஒரு தமிழ் ஊடகமும் பெரும் பங்கினை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது விடயம் பல்கலைக்கழகங்களில் பயிலும் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பற்றியதாகும். ஏனெனில் இவர்களே புலம்பெயர்ந்த தமிழர்களின் வருங்காலத் தலைமைகளாக அமையப் போகிறார்கள் என்றால், இவர்கள் இப்போதே சரியாகக் கையாளப்பட வேண்டும் என்று அவ்வாராய்வில் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படியில் 2018ம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த இலங்கையின் பாராளுமன்றக் குழுவினைத் தமிழ் மாணவர்கள் சந்தித்தமையினையையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இச் சந்திப்பு சிநேகபூர்வமாக அமைந்திருந்தது என்பதினை ஒரு தமிழ் ஊடகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் ஐந்தாம் கட்ட ஈழப்போரின் உத்திகளாகும். இதனை நாம் எதிர்த்து, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களைப் பாதுகாக்கவேண்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே அக்கினிப் பறவைகளின் வேலைத்திட்டங்கள் அமைகின்றன.
இதன்படி தமிழீழ அடையாள அட்டை மீள்வெயீடும் மற்றும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாள் நிகழ்வுகளும் அமைகின்றன. ஏனெனில் 2009க்கு முன் தமிழீழத்தில் இருந்த அரசியற்தளம் ஒரு நிரந்தரமான அரசியற்தளம் ஆகும். ஆனால் புலம்யபேர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் அமையப்பெற்ற அரசியற் தளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அரசியற்தளங்களாகும். அதாவது நிகழ்வுகள் நடைபெறும் நேரப்பகுதியில் மட்டுமே இவ்வரசியற் தளம் நடைமுறையிலுள்ளது.
ஆனால் எமது போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமென்றால், புலம்பெயர்ந்த தேசங்களில் அமைந்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியற் தளங்களை ஒரு நிரந்தரமான அரசியற்தளமாக மாற்றியமைக்க வேண்டும். அதன் முதற்படியே அக்கினிப் பறவைகள் அமைப்பின் தமிழீழ அடையாள அட்டையின் மீள்வெளியீடு ஆகும். ஏனெனில் இவ்வடையாள அட்டை நிரந்தரமாக எம்முடன் இருக்கும்.
அக்கினிப் பறவைகள் அமைப்பின் நிகழ்வுகளின் இறுதியில் தேசியக் கோடி இறக்கப்படுவதில்லை. இதுவரைக் காலமும் நிகழ்வின் இறுதியில் தேசியக் கொடியிறக்கப்பட்டவுடன் அவ்வரசியற் தளம் கலைந்து விடுகிறது. அதனை நிறுத்தும் முகமாவே அக்கினிப் பறவைகள் அமைப்பினால் தேசியக் கொடி கலந்து கொண்ட மக்களின் முன்னிலையில் இறக்கப்படுவதில்லை.
இப்போது நாம் இக்காணொளியின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டொம். ஐந்தாம் கட்ட ஈழப்போரின் காலத்தில் தமிழீழ செயற்பாட்டாளர்கள் இப்பொறிமுறைக்குள் மாட்டியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. பலர் அமைதி காப்பவர்களாக போராட்டத்தைத் திசைதிருப்புமுகமாகச் செயற்படுகின்றனர். ஏனையோர் குழப்பவாதிகள் அடிப்படையில் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் இவ்விடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதன்படி நந்திக்கடற் கோட்பாட்டின் அடிப்படையில் எந்தவொரு விட்டுக்கொடுப்பு இல்லாமலும் மற்றும் எந்தவொரு நாட்டின் நிகழ்ச்சிநிரலுக்குள் செல்லாமலும் எமது போராட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கும் தரப்புகளை இனங்கண்டு செயற்படவேண்டும். அதிலும் குறிப்பாக இளையோரைய ஆதரித்துச் செயற்படுதல் வரலாற்றுத் தேவையாக உள்ளது.
Schreib einen Kommentar