எதிர்வரும் பங்குனி மாதம் 6ம் திகதி அன்று சுவிஸ் நாட்டிலுள்ள ஜெனீவா மாநிலத்தில், தமிழர்களின் உரிமைக்கான பேரணி நடைபெறவிருப்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஜெனீவா மாநிலத்தில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமை அவையின் முன்பாக, நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டம் நடைபெற்ற காலத்திலிருந்து ஈழத்தமிழர் முள்ளிவாய்க்காலில் தங்களின் இறைமையை இழந்து 8 ஆண்டுகள் கழிந்த இன்றைய காலப்பகுதி வரை, தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் புலம்பெயர்வாழ் தமிழர். இருப்பினும் இந்தப் போராட்டங்களில் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கான காரணங்களை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் விளங்கிக்கொண்டோமென்றால், எதிர்வரும் 6.3.17 அன்று நடைபெறும் பேரணியின் வடிவத்தினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை விளங்கிக் கொள்வோம். அத்தோடு எமக்கு அநீதி இளைத்தவர்களிடமே நீதியைப் பிச்சை கேட்டு நிற்கின்றோம் என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழீழத்தில் கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு, புலக்குடியிருப்பு போன்ற இடங்களில் தங்களின் நிலத்துக்காக எமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பல தரப்புக்களிலிருந்து ஆதரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. இருப்பினும் கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு, புலக்குடியிருப்பு போன்ற இடங்களில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தனிப்பட்ட சம்பவாங்கள் அல்ல. அவை தமிழர்களுக்கு எதிராக மேற்றக்கொள்ளப்படும் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பின் வெளிப்பாடுகளேயாகும் என்பதனை நாங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டமைப்புச் சார்ந்த இன்வழிப்பிற்குள் தமிழரின் தாயகத்தில் மேற்றக்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், சிங்களமயமாக்கல், இராணுவமயமாக்கல், கட்டாயக் கருத்தடை போன்ற விடையங்கள் அடங்குகின்றன.
கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பின் வடிவங்களுக்கு எதிராக தாயகத்தில் வாழும் மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினவழிப்பின் மனித அவலத்தின் உச்சக்கட்டத்தின் பின் ஒன்றுபட்டு, கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்புக்கு எதிராக வெளிப்படையாகப் போராடுவது தற்போது சாத்தியமில்லை. எமது உறவுகள் சந்திக்கும் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பின் அனைத்துப் பாதிப்புகளையும் ஒன்றுபடுத்தி, கட்டமைப்புச் சார்ந்த இன்வழிப்புக்கு எதிராகப் போராடுவது, புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் தற்போதைய கடமையாகும். அதனால் எதிர்வரும் பங்குனி மாதம் 6ம் திகதி நடைபெறவிருக்கும் பேரணியில் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்புக்கு எதிரான குரல் பலமாக ஒலிக்க வேண்டும்.
கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்புக்கு எதிரான குரல் ஒலிப்பதோடு மட்டும் எமது கடமைகள் முடிவைடையாது என்பதனை முக்கியமாகக் கருத்திற்கொள்ள வேண்டும். யாருக்கு எதிராக எமது குரல் எழுப்பப்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான விடையமாகும். இப்போது நிலவி வரும் நிலைமைக்கு யார் காரணம்? இலங்கைத் தீவின் பூகோள அமைவிடத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தங்களின் நலன்களைத் தக்கவைப்பதற்காக, இலங்கை இனவழிப்பு அரசின் ஒற்றையாட்சி வடிவத்தை பாதுகாப்பதற்காக, தமிழர்கள் ஈட்டிய இறைமையை யார் அழித்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டறிந்தோமேன்றால், எமது அடுத்தக்கட்டப் போராட்டத்தின் திசையை நிர்ணயித்து, அதன் வழி செல்ல முடியும்.
ஆனையிறவுப் படைத்தளத்தை வீழ்த்தி, கட்டுநாயக்க மற்றும் பண்டாரநாயக்க விமானத்தளங்களைத் தாக்கிய பின், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழர்கள் இலங்கை இனவழிப்பு அரசுடன் ஒரு சமநிலையினை ஏற்றபடுத்தியிருந்தனர். அதன் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்தப் பேச்சு வார்த்தைகள் தோல்வி பெற்றது யாவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் இலங்கை இனவழிப்பு அரசின் படைபலம் பெருக்கப்பட்டு மறுபுறத்தில் தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலே இலங்கை இனவழிப்பு அரசு முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இறைமையை அழித்து, தமிழர்கள் மீது ஒரு கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பை ஏவியுள்ளது.
அண்மையில் வெளிவந்த ஒரு ஆய்வரிக்கையின் படி, அமெரிக்காவினால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்விபெற்றன எனக் குறிப்பிடுகிறது. அவ்வாய்வில் கூறப்பட்டுள்ள உதாரணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைக் கொண்டு வந்ததும் அடங்குகின்றது. அத்துடன் இலங்கைக் கடற்படையினரின் முன்னாள் தளபதி ஒருவர் நான்காம் கட்ட ஈழப்போரின் அனுபவங்களை ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் எவ்வாறு அமெரிக்காவின் உதவியுடன் கடற்புலிகளை பலவீனப்படுத்தியிருந்தார் என்பதைப் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் நடைபெற்ற பொழுதில் எழுதப்பட்ட ஒரு மின்னஞ்சலில் („Wikileaks“ல் உள்ள ஒரு ஆவணத்தில்), தமிழ் மக்களின் இழப்புகளுக்கு மத்தியில் விடுதலைப் புலிகளை அழித்ததை அமெரிக்காவின் தூதுவரான „Blake“ வரவேற்றார். இறுதியாக அமெரிக்காவும் ஐநாவின் மனித உரிமை சபையும் இலங்கை அரசின் புவியில் ஒருமைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அபிலாசைகளைப் புறக்கணித்து மறுக்கின்றனர் என்பதனை பகிரங்கமாக வெளிப்பதுகின்றனர். எனவேதான், தமிழினவழிப்பிற்குத் துணைபோகும் தரப்பினரிடமே நீதியை வேண்டி மன்றாடுகின்றோம் என்பதை மந்திற் கொள்ள வேண்டும்.
தமிழர்களின் இறைமையே தமிழர்களைக் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பிலிருந்து பாதுகாத்தது. அத்தோடு அந்த இறைமை இலங்கை இனவழிப்பு அரசின் ஒற்றையாட்சித் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இந்த ஒற்றையாட்சித் தன்மையின் அடிப்படையிலே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் நலன்கள் தங்கியுள்ளன. அதனால் அவர்கள் தமிழர்களின் இறைமையை என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் மற்றும் அதனால் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பை என்றுமே எதிர்காமாட்டார்கள் என்பதையும் தமிழர்களாகிய நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் இறைமை விட்டுக்கொடுக்கப்பட மாட்டது என்பதனை முள்ளிவாய்க்காலில் நிரூபித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாங்களும் அந்த வழியிற் சென்று, தமிழ் இறைமையின் உண்மையான எதிரிகளுக்கு எதிராக எமது போராட்டத்தின் திசையினைத் திருப்ப வேண்டும். அதன் முதலடியினை எதிர்வரும் பேரணியில் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எடுத்துவைக்க வேண்டும்.
Schreib einen Kommentar