
அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2017 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பு ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக ஒரு நிகழ்ச்சியையும் ஒழுங்குசெய்தது.
இந்நிகழ்வில் பூகோள அரசியல், தமிழிறைமை, தமிழினவழிப்பு மற்றும் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழிறைமை அழிக்கப்பட்டதற்குப் பின்னணியிலும் மற்றும் தமிழினவழிப்பின் பின்னணியிலும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஒத்துழைப்பு உள்ளது என்பது இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப் பட்டத்தோடு தமிழீழ, தமிழக மற்றும் புலம்பெயர் தமிழரசியல் செயற்பட்டாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலை 10.30 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் „Waisenhausplatz“ என்னும் இடத்தில் நிகழ்வு ஆர்மபமாகி, மதியம் 14.00 மணிக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் மண்டபத்தில் தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவு சுமந்து இறுதி நிகழ்வு ஆரம்பமானது. அந்நிகழ்வில் பூகோள அரசியல், தமிழிறைமை, தமிழினவழிப்பு மற்றும் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவவு தொடர்பான காணொளிகள் திரையிடப்பட்டதோடு, இவை தொடர்பான உரைகளும் ஆற்றப்பட்டன. மேலும் அக்கினிப் பறவைகளால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த மே 17 இயக்கத்தைச் சார்ந்த ஒரு அங்கத்தவர் உரையாற்றுகையில் தமிழீழத்தில் நடைபெற்ற இனவழிப்புத் தொடர்பாகவும் மற்றும் எதிர்காலத்தில் தமிழகம் நோக்கி வரப்போகின்ற தமிழினவழிப்புப் பற்றியும் எடுத்துரைத்தார். பின்பு தமிழீத்திலிருந்து திரு கஜேந்திரன் அவர்கள் ஆற்றிய உரையொன்றும் திரையிடப்பட்டது. இறுதியாக அக்கினிப் பறவைகளின் உறுப்பினர் ஒருவர் முடிவுரை வழங்க நிகழ்வு நிறைவுற்றது.
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் சார்பிலிருந்து ஒரு உரை ஆற்றப்பட்டு, தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களுக்காக ஒரு விசேட பூசையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Schreib einen Kommentar